இந்தியா

உ.பி: ஒன்றாக கட்டப்பட்டிருந்த 3 சிறுமிகள்... 2 பேர் உயிரிழப்பு... கொலையா? காரணம் என்ன?

உ.பி: ஒன்றாக கட்டப்பட்டிருந்த 3 சிறுமிகள்... 2 பேர் உயிரிழப்பு... கொலையா? காரணம் என்ன?

Sinekadhara

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு தீவனம் வாங்கச் சென்ற 3 சிறுமிகள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததுடன் இருவர் இறந்த நிலையிலும், ஒருவர் குற்றுயிராகவும் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 13,16 வயது சகோதரிகள் இருவர் தங்களுடைய 17 வயது உறவுக்கார சிறுமியுடன் மாட்டுக்கு தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் சென்றிருக்கின்றனர். மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் பயந்துபோன சிறுமிகளின் குடும்பத்தார் அவர்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.

தேடிச்சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மூன்று சிறுமிகளும் துப்பட்டாவால் ஒன்றாக சேர்த்துக் கட்டப்பட்டு வயலில் கிடந்ததை கண்டறிந்திருக்கின்றனர். சிறுமிகளை காப்பாற்ற எண்ணி கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இரண்டு சிறுமிகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். 17 வயது சிறுமி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததால் அவரை கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகள் விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இறந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

ஆறுபேர் கொண்ட போலீஸ்குழு, சம்பவ இடத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமிகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அதிக அளவிலான நுரை இருந்ததாக காவல் அதிகாரி ஆனந்த குல்கர்னி தெரிவித்திருக்கிறார். மேலும் பிரேத பரிசோதனை முடிந்தபிறகே இந்த கொலைகளின் பின்னணியிலுள்ள பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சிறுமிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘’தீவனம் வாங்கச்சென்ற சிறுமிகள் நீண்டநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் கவலையுற்ற நாங்கள் அவர்களைத் தேடிச்சென்றோம். அவர்கள் பேரைச்சொல்லி சத்தமாக அழைத்துப்பார்த்தோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. வீட்டிலிருந்து சற்று தொலைவிலுள்ள எங்கள் வயல்பகுதியில் அவர்களைத் தேடிச்சென்றபோது, எங்கள் வயலில் அவர்கள் மூவரும் ஒரே துணியால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தனர். எங்களுக்கு எதிரிகள் என்று யாருமில்லை. எனவே இந்த சம்பவம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது என்று போலீஸ் விசாரணையில் மட்டுமே தெரியவரும்’’ என்று வருத்தம் தெரிவித்தனர்.