இந்தியா

கர்நாடகா: அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணம்! பலருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகா: அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணம்! பலருக்கு தீவிர சிகிச்சை

ச. முத்துகிருஷ்ணன்

கர்நாடகாவில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். குழந்தைகள் உட்பட மேலும் பலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவுநீர் கொண்டு செல்லும் குழாயுடன் குடிநீர் வழங்கும் குழாய் இணைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விசாரணைக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியின் கீழ் ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

"ராய்ச்சூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் ஏற்பட்ட 3 இறப்புகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளரிடம் இறப்புக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டேன். சிலர் மழையினால் குழாய் சேதமடைந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். தொழில்நுட்ப அறிக்கை வந்தபிறகே முழு உண்மை தெரிய வரும் " என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராய்ச்சூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாதிரிகளை பரிசோதனை செய்து குடிநீர் பாதுகாப்பு குறித்த சான்றிதழை பெற மாவட்ட துணை ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியை உள்ளடக்கிய அதிகாரிகளின் ஏதேனும் குறைபாடுகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு மூலம் போலீஸ் விசாரணை நடத்தப்படும், மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.