இந்தியா

மத்தியபிரதேசம்: 3 போலீசாரை சுட்டுக் கொன்ற மான் வேட்டைக்காரர்கள்

மத்தியபிரதேசம்: 3 போலீசாரை சுட்டுக் கொன்ற மான் வேட்டைக்காரர்கள்

Veeramani

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 3 காவலர்கள் மான் வேட்டையாடுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய குணா மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, "துப்பாக்கியுடன் இருந்த மான் வேட்டைக்காரர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயன்றபோது, தங்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசாரை நோக்கி வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர்.



இந்த துப்பாக்கிச்சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மினா மற்றும் காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

குணா மாவட்டத்தில் உள்ள அரோன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சில வேட்டைக்காரர்கள் பிளாக்பக்ஸ் எனப்படும் அரியவகை மான்களை வேட்டையாடுவதற்காக முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிக்கு சென்றனர். இந்த வனப்பகுதியில் இருந்து பல மான்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.



3 போலீசாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ஆலோசிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது இல்லத்தில் உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.