manipur x page
இந்தியா

மணிப்பூர்|'3 குழந்தைகள்.. 3 பெண்கள்' 6 பேரைக் கடத்திச் சென்ற குக்கி போராளிகள்! அதிகரிக்கும் பதற்றம்!

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை ஆயுதமேந்திய குக்கி போராளிகள் இன்று கடத்திச்சென்றனர்

Prakash J

மணிப்பூர் என்றதுமே, இப்போது எல்லோர் நினைவுகளிலும் வருவது கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை மட்டுமே. ஆனால், அதற்கு இன்றுவரை முடிவில்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஆயுதமேந்திய குக்கி போராளிகள் என்று சொல்லக்கூடிய சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர், நேற்று மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 குக்கி போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்தனர்.

இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை ஆயுதமேந்திய குக்கி போராளிகள் இன்று கடத்திச்சென்றனர். 60, 31, 25 ஆகிய வயதுடைய 3 பெண்களையும், 3 குழந்தைகளையும் குக்கி போராளிகள் கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் 6 மாத குழந்தையும் அடக்கம். அதேவேளை, மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஜகுரதோர் பகுதியில் உள்ள லைஷ்ராம் பரேல் சிங் (63) மற்றும் மைபம் கேஷ்வோ சிங் (71) ஆகியோரை குக்கி போராளிகள் தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவங்களால் ஜிரிபாம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதையும் படிக்க:பரப்புரையில் துப்பாக்கிச் சூடு| உச்ச பாதுகாப்பில் ட்ரம்ப் வீடு.. தோட்டத்தைச் சுற்றிவரும் ரோபோ நாய்!

இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள், ”நேற்று துப்பாக்கிச்சூடு மற்றும் தீ வைப்பு தொடங்கியதும், மக்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர், அது தணிந்தபிறகு, நிவாரண முகாமில் இருந்து 10 பேரைக் காணவில்லை என்பதைக் கண்டறிந்தோம். இன்று காலை, இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இருவர் உயிருடன் காணப்பட்டனர். மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோரை இன்னும் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கலாம் அல்லது அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்