18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
2 ஆம் கட்டமாக வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தின் 14 தொகுதிகள், ராஜஸ்தானின் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
போலவே மகாராஷ்ட்ராவின் 8 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் 7 தொகுதிகள், அசாமின் 5 தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள்,சத்தீஸ்கரின் 3 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தின் 3 தொகுதிகள் மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரின் தலா ஒருதொகுதிக்கு வரும் 26 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தலை பொறுத்தவரை, கச்சத்தீவு பிரச்னை தமிழக பரப்புரை களத்தில் அதிகளவில் எதிரொலித்தது. கச்சத்தீவு பிரச்னையை முதலில் கையில் எடுத்தது பாஜக. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளே கச்சத்தீவை தாரைவார்த்ததாக பாஜக குற்றஞ்சாட்டியது. அதேபோல், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தேர்தல் பத்திர திட்டத்தை பரப்புரை களத்தில் பேசியது I.N.D.I.A. கூட்டணி.
தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பாஜக பணம் பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதேபோல், காங்கிரசின் வங்கிக் கணக்கு வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது, கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக வழிநடத்துவதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
முதற்கட்ட பரப்புரை களம் இவ்வாறாக ஓய்ந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது மத அரசியல்.
ராஜஸ்தான் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்களை ஊடுருவல்காரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுவார்கள்” என இஸ்லாமியர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
பிரதமரின் பேச்சு காங்கிரஸ் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலளித்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.