இந்தியா

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் நாளை தீர்ப்பு

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் நாளை தீர்ப்பு

webteam

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நாளை காலை‌ 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் போது வழக்கின் மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, ஷாஹித் பல்வா உள்ளிட்டோர் நீதிமன்‌றத்தில் ஆஜராகி இருந்தனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு குறித்த விசாரணை கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் தொடங்கியது. இதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோன நிலையில், தமிழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் தினமான நாளை 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.