இந்தியா

2ஜி வழக்கில் சிபிஐ வேண்டுமென்றே குழப்பியுள்ளதா: அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

webteam

நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கை சிபிஐ வேண்டுமென்றே குழப்பியுள்ளதா என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ‌முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இத்தீர்ப்பை வழங்கினார். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி சைனி ஒரே வரியில் தீர்ப்பை அளித்தார். ராசா, கனிமொழி தவிர கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார், ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா உள்ளிட்ட 17 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2ஜி ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கியதுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீழ்வதற்கும் காரணமாக இருந்த வழக்கு. இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ வேண்டுமென்றே இந்த வழக்கில் குழப்பியுள்ளதா? மக்களுக்கு பதில் வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.