இந்தியா

2ஜி வழக்கில் அக்.25-ம் தேதி தீர்ப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

2ஜி வழக்கில் அக்.25-ம் தேதி தீர்ப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

rajakannan

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக்டோபர் 25ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தீர்ப்பு வழங்கும் தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற 2ஜி ஏலத்தில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 நவம்பர் 10ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அப்போது மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தன் பதவியை நவம்பர் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரி 17ஆம் தேதி ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கலான 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் இடம் பெற்றன. அத்துடன் ஆ.ராசா அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் 2ஜி வழக்கு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து‌தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்துள்ளார்.