இந்தியா

"இது அரைகுறை நீதி"- 28 மாதங்களுக்குப்பின் ஜாமீனில் வெளியேவந்த கேரள பத்திரிகையாளர் சித்திக்

"இது அரைகுறை நீதி"- 28 மாதங்களுக்குப்பின் ஜாமீனில் வெளியேவந்த கேரள பத்திரிகையாளர் சித்திக்

JustinDurai

ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க உத்தரப் பிரதேசம் சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி. காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. சிறையில் சித்திக் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

சித்திக்கின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், 'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் பேட்டி எடுக்க சென்றது எப்படி குற்றமாகும்?’ எனக் கேள்வியெழுப்பி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனாலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் இருந்ததால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்தார்.

இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்தும் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து சித்திக் கப்பன் இன்று சிறையிலிருந்து தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமீன் குறித்து பேசியுள்ள சித்திக் கப்பன், "கிட்டத்தட்ட 28 மாத நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் நான் சிறையில் இருந்து வெளியே வருகிறேன். இந்த இரண்டரை வருடமாக எனக்கு ஆதரவளித்த அனைத்து ஊடகங்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டன. இப்போது வெளியே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது அரைகுறை நீதி. பத்திரிகையாளராக இருப்பது, ஒரு குற்றமல்ல. கடுமையான சட்டங்களுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடருவேன். எனக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்த பிறகும் என்னை சிறையில் அடைத்தனர். நான் சிறையில் இருப்பதால் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை. இந்த இரண்டு வருடங்கள் மிகவும் கடினமானவை, ஆனால் இதற்கிடையே நான் ஒருபோதும் பயப்படவில்லை" என ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.