இந்தியா

சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம்: முதலிடத்தில் பீகார்! தமிழகத்தின் நிலைஎன்ன ?

சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம்: முதலிடத்தில் பீகார்! தமிழகத்தின் நிலைஎன்ன ?

சங்கீதா

இந்தியாவில் சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே, 18 வயது முதல் 29 வயது வரையுடைய பெண்களில் 25 சதவிகிதம் பேருக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்றிருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு குழந்தைத் திருமணங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18-ம், ஆண்களுக்கு 21-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 18 முதல் 29 வயது வரையுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பேருக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. இதேபோல், 21 முதல் 29 வயது வரையுடைய ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 15 சதவிகித பேருக்கு 21 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில், பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்த மாநிலங்களில் மேற்குவங்கம் 42 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. பீகார் (42%), திரிபுரா (39%, ஜார்க்கண்ட் (35%), ஆந்திரப்பிரதேசம் (33%), அஸ்ஸாம் (32%), தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ (28%), தெலுங்கானா (27%), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் (25%) ஆகியவை இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதுபோல், குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம் நடைபெறும் மாநிலங்களில் 25 சதவிகிதத்துடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் 24 சதவிகிதத்துடனும், ஜார்க்கண்ட் 22 சதவிகிதத்துடனும், அருணாச்சலப்பிரதேசம் 21 சதவிகிதத்துடனும், மேற்கு வங்கம் 20 சதவிகிதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில், குறைந்தபட்சமாக லட்சத்தீவு, சண்டீகரில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான ஆண்களுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. கேரளத்தில் 1 சதவிகித ஆண்களுக்கும், தமிழ்நாடு, கர்நாடகா, நாகலாந்து ஆகிய மாநிலங்கள் 4 சதவிகித ஆண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. 11 சதவிகித திருமணங்கள் ரத்த சொந்தங்களில் நடைபெறுவதும், இது கேரளம் தவிர்த்து தென் மாநிலங்களில் பொதுவான நிகழ்வாக காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.