கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஐடி கல்வி நிறுவனங்களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது ஐஐடி நிறுவனங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியாவது பயில வேண்டும் பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களிலிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் ஆந்திர மாநில எம்பியான விஜயசாய் ரெட்டி ஐஐடியில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் ஐஐடியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2461 மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 57% மாணவர்கள் ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-கராக்பூர் ஆகிய நிறுவனங்களிலிருந்து பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளனர்.
ஐஐடி | இடைநிற்றல் மாணவர்கள் |
டெல்லி | 782 |
கராக்பூர் | 622 |
கான்பூர் | 190 |
சென்னை | 128 |
பாட்னா | 92 |
ஹைதராபாத் | 85 |
ரூர்கி | 57 |
இந்தோர் | 50 |
புவனேஸ்வர் | 39 |
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஐடி டெல்லியிலிருந்து 782 பேரும், ஐஐடி கராக்பூரிலிருந்து 622 பேரும் படிப்பை பாதியில் விட்டுள்ளனர். அதேபோல ஐஐடி மெட்ராஸ்(சென்ன) கல்வி நிறுவனத்தில் 128 பேர் பட்டபடிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர். மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களிலிருந்து இடைநிற்றல் செய்த மாணவர்களில் 47.5% பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தப் பிரிவை சேர்ந்த 1,171 மாணவர்கள் ஐஐடி நிறுவனங்களிலிருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர்.
ஐஐடி நிறுவனங்களிலிருந்து அதிகளவில் மாணவர்கள் வெளியேறுவதற்கு மருத்துவ காரணங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழக்கத்தில் வாய்ப்புகள், தவறான படிப்பை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை காரணமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.