பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட சோதனை pt web
இந்தியா

பெங்களூரு: பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனை; 23 ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்தது அம்பலம்

பெங்களூரில் பள்ளி வாகனங்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், 23 வாகன ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்தது கண்டறியப்பட்டது.

Angeshwar G

பெங்களூரு காவல்துறையினர் இன்று காலை பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடத்தப்பட்டது. மொத்தமாக 3016 வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், 23 வாகனங்களின் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கியது கண்டறியப்பட்டது.

மதுபோதையில் வாகனங்களை ஓட்டிய வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர்களது ஓட்டுநர் உரிமங்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

”சோதனைகள் தொடரும்” - அதிகாரிகள்

இந்த சோதனை தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) அனுசேத் கூறுகையில், “மதுபோதையில் வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185ன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது 11 வாகனங்கள் தகுதி சான்றிதழ் (fitness certificate) இன்றி காணப்பட்டன. அத்தகைய வாகனங்கள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகள் தொடரும்” என தெரிவித்துள்ளார்.