இந்தியா

தீவன இலைகளில் நஞ்சு?: மயங்கி விழுந்து உயிரிழந்த 22 பசுக்கள்

தீவன இலைகளில் நஞ்சு?: மயங்கி விழுந்து உயிரிழந்த 22 பசுக்கள்

webteam

உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோ சாலையில் 22 பசுக்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்து உயிரிழந்தன. 

உத்திரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியில் அமைந்துள்ள கோ சாலை ஒன்றில் 70க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டன. இந்நிலையில் வழக்கம் போல் தீவன இலை கொடுக்கப்பட்டு பசுக்கள் ஓய்வாக கட்டப்பட்டன. சிறிது நேரத்திலேயே பசுக்கள் எல்லாம் வரிசையாக சரிந்து விழுந்து உயிரிழந்தன. இதனைக் கண்ட பராமரிப்பு ஊழியர் உடனடியாக கோ சாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். 

மருத்துவர்கள் குழுவுடன் கோ சாலைக்கு வந்த நிர்வாகம், மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்குழு, பசுக்களின் தீவனம், தண்ணீர் ஆகியவற்றை சோதனை செய்தனர். அதேபோல் உயிரிழந்த பசுக்களின் உடற்கூராய்வும் செய்யப்பட்டது. 

இதில் பசுக்கள் இரையாக உண்ட கம்பு இலைகளில் நைட்ரஜன் அளவு அதிகமாக இருந்துள்ளது என்றும், அதனால் நைட்ரேட் நஞ்சு தாக்கப்பட்டு பசுக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் மேற்கொண்டு சில சோதனைகளையும் மருத்துவக்குழு செய்துவருகின்றனர்.