இந்தியா

21 சொகுசு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே!

21 சொகுசு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே!

webteam

20 கிலோ தங்க நகை, 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், பவுன்சர்ஸ் என இருந்தும் ’கோல்டன் பாபா’ என்ற தங்க சாமியாரின் குறை தீரவில்லை!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி, கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நீரை எடுத்து, தங்கள் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பூஜை செய்வது வழக்கம்.

இந்த யாத்திரையில் 'கோல்டன் பாபா' எனப்படும் சுதிர் மக்கார் என்ற சாமியார் வருடம் தோறும் பங்கேற்பார். தொடர்ந்து, 25வது ஆண்டாக, இந்தாண்டும் பங்கேற்றுள்ள அவர், 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் 14.5 கிலோ நகைகளை அணிந் திருந்தார். நடமாடும் நகைக்கடையான இந்த பாபாவின் நகைகளில், கடவுள்களின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த ’கோல்டன் பாபா’வுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு பவுன்சர்களையும் பாதுகாப்புக்கு வைத்துள்ளார். அவரின் பின்னால், பி.எம்.டபிள்யூ, பார்ச்சுனர், ஆடி, இன்னோவா உள்ளிட்ட விலை உயர்ந்த 21 சொகுசு கார்கள் அணிவகுத்து செல்லும். இந்த பாபா, காஸியாபாத்துக்கு நேற்று வந்தார். அங்கு டெல்லி- மீரட் சாலையில் உள்ள ரிசார்ட்ஸில் தங்கினார். 

அப்போது அவர் கூறும்போது, ‘இறைவன் அனுமதி அளித்தால், எனது உடல்நிலையும் ஒத்துழைத்தால் அடுத்த வருடமும் யாத்திரைக்கு வரு வேன். கடந்த மூன்று வருடமாக எனக்கு கடுமையான வயிற்று வலி. இதற்காக மும்பை உட்பட பல பகுதிகளின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றேன். இருந்தும் வலி குறைந்தபாடில்லை. என் குறை தீரவில்லை’ என்றார்.

‘அடுத்த ஆண்டுடன் எனது யாத்திரையை முடித்துக்கொள்வேன். அதுதான் என் கடைசி யாத்திரையாக இருக்கும்’ என கடந்தாண்டு கூறியிருந் தார் இந்த பாபா. நகைகளுடன் இவர் 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் அணிந்துள்ளார். சில நேரங்களில் வாடகைக்கு ஹம் மர், ஜாக்குவார், லேண்ட்ரோவர் கார்களை அமர்த்தியும் அவர் கன்வர் யாத்திரையில் கலந்துகொள்வது வழக்கம்.

‘கார்கள் மற்றும் தங்கம் மீதான என் மோகம் எப்போதும் இறந்துவிடாது.  எனக்குப் பிறகு இவற்றை விருப்பமான சீடனுக்கு கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார் இந்த தங்க பாபா!