இந்தியா

இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட் - எந்தெந்த துறைகளில் இந்தாண்டு சம்பள உயர்வு இருக்கும்?

இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட் - எந்தெந்த துறைகளில் இந்தாண்டு சம்பள உயர்வு இருக்கும்?

சங்கீதா

இந்தியாவில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கார்ப்பரேட் துறை ஊழியர்களுக்கு, 9.9% சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று ஆய்வறிக்கை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அயோன் இந்தியா (Aon India) ஆய்வு நிறுவனம், தனது 26-வது வருடாந்திர சம்பள உயர்வு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-ம் ஆண்டில் சம்பள உயர்வானது 9.9% ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.3% ஆக இருந்தது. 

கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில், 33% நிறுவனங்கள், 2022-ல் 10%-க்கும் அதிகமான சம்பள உயர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு, 5 சதவீதம் சம்பள உயர்வு அதிகரித்து காணப்படும். இந்த சம்பள உயர்வு, கொரோனா முதல் அலையில் 6.1% ஆகக் குறைந்து, பின்னர் 2021-ல் கொரோனா காலத்திற்கு முந்தைய சம்பள உயர்வு அளவான 9.3% நிலைக்குத் திரும்பியது நினைவிருக்கலாம்.

மேலும், கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் கடுமையாக இருந்தபோதிலும், பிரிக்ஸ் (BRICS - Brazil, Russia, India, China, and South Africa) கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் அதிக சம்பள உயர்வு கிடைக்கப் பெறலாம் என்று இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதாவது, பிரேசிலில் 5% -மும், ரஷ்யாவில் 6.1% -மும், சீனாவில் 6% சம்பள அதிகரிப்பும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஆனால், இந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் 9.9% சம்பள உயர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சம்பள உயர்வு 3.6% ஆகவும், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் 3% சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் உள்ள கார்ப்பரேட் துறைகள் முறையே 2.9% மற்றும் 4% சம்பள உயர்வை, தங்களது ஊழியர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரத்தில், இந்தியாவில் இந்த ஆண்டு சுமார் 88.3% நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் நல்ல வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கின்றன. மேலும், 9.7% நிறுவனங்கள், இந்த ஆண்டும் பெரிதாக எந்த வளர்ச்சியும் இருக்காது என்று நினைக்கின்றன. 2% நிறுவனங்கள் இந்த ஆண்டு இழப்பை சந்திக்கலாம் என்று கருதுகின்றன. இது 2020-ல் 36.8% ஆகவும், 2021-ல் 77.5% ஆகவும் சரிந்திருந்தது. 

இதில், இ-காமர்ஸ் மற்றும் வென்சர் கேப்பிட்டல் (12.4%), உயர் தொழில்நுட்பம்/ ஐடி துறை (11.6%), தொழில்முறை சேவைகள் (10.9%), ஐடி துறை சார்ந்த துறைகள் (10.7%), பொழுதுபோக்கு/கேமிங் (10.2%) மற்றும் லைஃப் சயின்ஸ் (9.6%) துறைகள் மிக உயர்ந்த ஊதிய உயர்வுகளைக் கொண்ட சில துறைகளில் அடங்கும். அதேநேரத்தில், உலோகங்கள்/சுரங்கம் (8.3%), QSR (ஃபாஸ்ட் புட் உணவகங்கள்) /உணவகங்கள் (8.5%), மற்றும் சிமெண்ட் (8.6%) ஆகிய துறைகள் இந்த ஆண்டு மிகக் குறைந்த சம்பள உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அயோன் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ரூபங்க் சவுத்ரி கூறுகையில், “இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதுடன், நேர்மறையான வணிக உணர்வு இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். கொரோனா முதல் அலையின் போது சிரமப்பட்ட துறைகளான சில்லறை விற்பனை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விரைவான உணவு சேவை நிறுவனங்கள் கூட, நவீன வர்த்தகம்/டிஜிட்டல் வர்த்தங்களில் கவனம் செலுத்தின. இதன் காரணமாக 8% அல்லது அதற்கு மேற்பட்ட சம்பள உயர்வுகள் இருந்தது.

இருப்பினும், உயர் பணவீக்க பிரச்சனை மற்றும் இன்னும் நிலவும் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, நிறுவனங்களின் சம்பள உயர்வில் சில தலைவலிகளையும் நாங்கள் பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார். சம்பள கணக்கெடுப்பில் 40-க்கும் மேற்பட்ட துறைகளில், 1500 நிறுவனங்களில் இந்த ஆய்வினை அயோன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஆக இந்த சவாலான காலகட்டத்திற்கு மத்தியில் தான், ராஜினமா செய்யாமல் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள, நிறுவனங்கள் அதிகளவு சம்பள உயர்வினை செய்து வருகின்றன என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சியும் வலுவான நிலையை எட்டி வருவதன் காரணமாக, நடப்பு ஆண்டில் இன்னும் வளர்ச்சி விகிதம் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.