இந்தியா

தொண்டர்களுடன் உரையாட வாட்ஸ்அப் குழுக்கள்.. பாஜக முடிவு

தொண்டர்களுடன் உரையாட வாட்ஸ்அப் குழுக்கள்.. பாஜக முடிவு

Rasus

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தற்போது பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனைகளும் நடைபெறுகின்றன. டெல்லியில் நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள், பூத் இன்சார்ஜ் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனையை அமித் ஷா நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ராம் லால், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதாவது பாஜகவின் தேசியத் தலைவர்கள் தொண்டர்களுடன் எளிதாக உரையாடும் வகையிலும், அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையிலும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொண்டர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்த 10 குடும்பங்களை சந்துத்து பாஜக குறித்து எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் தக்க வைக்க பாடுபடுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் பிரதமர் மோடியை 2-வது முறையாக பிரதமராக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுதவிர டெல்லி அரசின் தோல்விகள் குறித்து மக்களுக்கு, தொண்டர்கள் எடுத்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.