2017 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் நவ்தீப் சிங். இவர் தனது 12 ஆம் வகுப்பில் 88% மதிப்பெண்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் வெற்றி பெற்றப் பின் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். அவரது தந்தை கோபால் சிங், முக்த்சர் மாவட்டத்தில் அரசு மேல்பள்ளியில் பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார்.
தற்போது 25 வயதுடைய நவ்தீப் சிங் முதுகலை மருத்துவம் (MD) இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். படிக்கும்போதே ரேடியாலஜி துறையில், junior resident ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் அவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இருந்து, மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக, காவல்துறைக்கு காலை 7 (17/09/2024) மணியளவில் தகவல் கிடைத்தது. சம்பவத்தின்படி, தந்தையொருவர் தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததால், மகனின் நண்பரை தொடர்பு கொண்டு பார்க்கச் சொல்லியுள்ளார். நண்பர் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்துள்ளது. பின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், மாணவர் தற்கொலை செய்து சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது” என தெரிவித்தார்.
கல்லூரி வட்டாரங்கள் நவ்தீப் சிங்கை புகழ்ந்துதான் தெரிவிக்கின்றன. நவ்தீப் சிங் எப்போதும் முன்மாதிரியான மாணவராக இருந்தார் என தெரிவிக்கினறனர்.
டெல்லி காவல்துறை வட்டாரங்கள் மாணவர் தற்கொலை தொடர்பாக கூறுகையில், “அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெளிவாக தெரியவில்லை. கல்லூரியில் சிறந்த மாணவராக விளங்கியுள்ளார். தொலைபேசி அழைப்புகளை அவர் எடுக்காத நிலையில், மாணவரின் தந்தை, அவருடைய நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் சென்று பார்க்கப்பட்டபோது சடலமாக கிடந்துள்ளார்” என தெரிவித்தனர்.
மாணவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் அவரது சொந்த ஊரான முக்சரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.