2016-ஆம் ஆண்டிற்கு முன்பும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றுள்ளதாக, 2016 தாக்குதலின் படை தளபதி மற்றும் ராணுவத்தின் முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல் ஹூடா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் 2016-ஆம் ஆண்டு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் உரியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்தது. இதனையடுத்து இந்தியாவில் முதல்முறையாக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக பாஜக அரசு பெருமையுடன் கூறிவந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் ராணுவத்தால் நடத்தப்பட்டிருந்தன என தெரிவித்தது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் ராணுவத்தின் முன்னாள் லெப்டினண்ட் ஜென்ரல் ஹூடா, 2016ஆம் ஆண்டிற்கு முன்பும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கூறுவதைபோல 2016ஆம் ஆண்டிற்கு முன்பும் சர்ஜிகல் ஸ்டிரைக், எல்லை தாண்டிய ராணுவ தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் அவை எந்த இடத்தில் எப்போது நடைபெற்றது என்பது பற்றிய விவரம் எனக்கு நினைவுக்கு இல்லை. எனினும் எல்லை தாண்டிய ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன”எனத் தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராஜிவ் சுக்லா, “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 6 சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல்கள் நடைபெற்றன. அத்துடன் வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் இரண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றன” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவின் ஜி.வி.எல் நரசிம்மராவ், “சர்ஜிகல் ஸ்டிரைக் 2016ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெறவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்