நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிடக் கோரி அவரது பெற்றோர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடு இரவில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இந்தப் பாலியல் வன்கொடுமையால் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்ட பிறகு, பவன் குப்தா, முகேஷ் சிங், வினேய் சர்மா, ராம் சிங், அக்ஷய் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து குற்றவாளிகளுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டு இந்தக் குற்றவாளிகளின் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.
இவ்வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்றவர்கள் தங்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்து அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி நிர்பயாவின் பெற்றோர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் குற்றவாளிகளுக்கு அதிக அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டதால் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு வருகின்ற மார்ச் மாதம் 2ஆம் தேதி விசாரனைக்கு வரும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் டெல்லி பாலியல் வன்முறை குற்றவாளிகளை 2 வாரத்திற்குள் தூக்கிலிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட முடியாது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.