இந்தியா

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு

webteam

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22 ஆம் தேதி தூக்கில் இடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் முகே‌‌ஷ் குமார் சிங் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்த வகையில் 22-ந்தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கையை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு ஒன்றை ஆளுநருக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கருணை மனுவை ஆளுநர் நிராகரித்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் கருணை மனுவை நிராகரித்தார்.

இதைத்தொடர்ந்து திகார் சிறைத்துறை நிர்வாகம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கிலிடும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.