இந்தியா

’இந்த சிஸ்டத்தை மாற்ற முடியாது’: ராஜினாமா செய்த கேரள ஐஏஎஸ் அதிகாரி பேட்டி

’இந்த சிஸ்டத்தை மாற்ற முடியாது’: ராஜினாமா செய்த கேரள ஐஏஎஸ் அதிகாரி பேட்டி

webteam

’இந்த சிஸ்டத்தை மாற்ற முடியவில்லை என்பதால் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்’ என்று கேரளாவை சேர்ந்த அதிகாரி கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். தான் ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு, செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாள்களாக இருந்தார். 9 வது நாளில் பிற அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, இந்த தகவல் வெளியுலகத்துக்கு தெரியவந்து கண்ணன் கோபிநாதன் பிரபலமடைந்தார். 

நாடு முழுவதும் அவருக்கு பாராட்டு குவிந்தது. இந்நிலையில், அவர் தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன்.  இப்போது என் சொந்தக் குரலையே இழந்துவிட்டேன். சுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்துள்ளேன். இந்த சிஸ்டத்தில் இருந்துகொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

ஆனால், இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்யவேண்டும். இப்போது அரசு ஓய்வு இல்லத்தில் வசித்து வருகிறேன். அடுத்து எங்கு போக வேண்டும் என்று தெரியவில்லை. என் மனைவி வேலை பார்க்கிறார். அவர் எனக்கு ஆதரவாக இருப்பது தைரியம் அளிக்கிறது’’ என்றார்.