இந்தியா

’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு

’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு

webteam

டிக் டாக் செயலிக்காக சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

‘டிக்டாக்’ செயலி, இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்துள்ளது. இதில் பாடல்களுக்கு ஏற்ப நடித்தும் ஆடியும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதில் அதிக லைக் வேண்டும் என்பதற்காக சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாகசம் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த சாகசம், உயிரை பறித்திருக்கிறது. 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயகனஹள்ளி தாலுகாவில் உள்ள கோடேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (22). இவர் அங்குள்ள இசை குழுவில் நடனக் கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், டிக் டாக்-கில் பதிவிடுவதற்காக, நண்பரின் உதவியுடன் ஓடி வந்து பின்பக்கமாக பல்டி அடித்து சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவர் தடுமாறியதில் அவரது தலை நேரடியாக தரையில் மோதியது. இந்த விபத்தில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு முறிந்தது.

உடனடியாக அவர், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதுகெலும்பு முழுவதையும் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் தற்போதைக்கு அவரின் நிலைமை குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் 8 நாள் சிகிச்சைக்குப் பின் குமார் நேற்று உயிரிழந்தார்.

இதுபற்றி அவரது பெற்றோர் கூறும்போது, ‘’முக்கிய எலும்புகள் நொறுங்கிவிட்டதால், பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் ஆரம்பத்திலேயே கூறிவிட்டனர். இவன் எங்களின் ஒரே மகன்’’ என்று கண்ணீர் விட்டனர். 

குமாரசாமியின் மைத்துனர் மஞ்சுநாத் கூறும்போது, ‘’அவரிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. டிக் டாக் செயலி பற்றியும் தெரி யாது. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால், அவர் வழக்கமாக செய்யும் சாகசத்தில் ஈடுபட்டார். அது தவறாகிவிட்டது’’ என்றார்