பாந்த்ராவில் உள்ள ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த குறுஞ்செய்தியில், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் கொலை செய்யாமல் இருக்க பணம் வழங்க வேண்டுமென்றும், கேட்கும் தொகையை வழங்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஜீஷன் சித்திக்கின் அலுவலக ஊழியர் காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு திங்களன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளியை காவல்துறையினர் தேடினர். பின்னர் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருந்து 20 வயதான குஃப்ரான் எனபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குஃப்ரான் மீண்டும் மிரட்டல் அனுப்ப திட்டமிட்டு, பணம் கேட்க இருந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர். “இவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி சல்மான் கானையும், சித்திக்கையும் பயமுறுத்தும். இருவரில் ஒருவராவது என்னை தொடர்பு கொள்ளும் நிலையில், அவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்தேன்” என காவல்துறையினரிடம் குர்ஃபான் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குர்ஃபான் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர் முதலில் குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில், மீண்டும் அதே எண்ணுக்கு டயல் செய்துள்ளார். இதில் சல்மான் கான் மற்றும் சித்திக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார், இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கூட ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஏப்ரல் மாதம் நடிகரின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து மிரட்டல் வந்ததை சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், முன்னாள் எம்எல்ஏவும், என்சிபி (அஜித் பவார்) பிரிவுத் தலைவருமான பாபா சித்திக், மும்பையில் உள்ள அவரது மகன் ஜீஷனின் அலுவலகம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தந்தை கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ஜீஷனுக்கு மிரட்டல் வந்தது குறிப்பிடதக்கது .