ராஜஸ்தான் முகநூல்
இந்தியா

ராஜஸ்தான்|கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத சிறுவன்! தாயிடமே செல்ல மறுப்பு! உருக்கமான சம்பவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

ராஜஸ்தானில் கடத்தியவரை விட்டு பிரிய மனம் வராமல், தனது தாயிடம் செல்ல மறுத்து குழந்தை கதறி அழுதச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களையே மிஞ்சும் அளவிற்கு ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு குழந்தை 11 வயதுக்குட்பட்ட பிருத்வி என்ற குழந்தை கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.25,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர், விருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில், துறவியாக வசித்து வந்தார். அவரது பெயர் தனுஷ் சாஷர் . இவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவர் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் தலைமைக் காவலராகப் பணிப்புரிந்தார்.

ஆனால், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், போலீஸ் என்பதால், போலீஸின் நடவடிக்கையை நன்கு அறிந்தவர். ஆகவே, தான் பிடிப்பட்டு கொள்வதை தடுப்பதற்காக, நீளமான முடி, தாடியை வளர்த்து தனது அடையாளத்தையே மாற்றியுள்ளார்.

மேலும், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போன் பயன்படுத்தாமல், அடிக்கடி இருப்பிடங்களை மாற்றியுள்ளார்.” என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் அளித்த தகவலில்,

குற்றம் சாட்டப்பட்டவர் மிகவும் தந்திரமானவர், அவர் ஒரே நபரை இரண்டு முறை சந்தித்ததிப்பதை தவிர்த்துள்ளார்.மேலும், தனது தாடிக்கு அடிக்கடி வெள்ளை சாயம் பூசியுள்ளார்.

கடத்தப்பட்ட, பிருத்வியை தனது சொந்த மகனாக கருதி வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில்தான், தான், இது குறித்த அறிந்த காவல்துறையினர், கடந்த ஆகஸ்ட் 22 ஆம்தேதி தனுஷ் சாஹரை கைது செய்வதற்கென்று ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளனர்.

பிறகு, இவர் தங்கியிருந்த யமுனை நதிக்கரையில் உள்ள பர்க்ரமா பாதையில் உள்ள குடிசையில், துறவியாக வேடமணிந்து அமர்ந்திருந்த தனுஷை, துறவிகள் போலவே வேடமணிந்து வந்த காவல்துறையினர் பக்தி பாடல்களை பாடி சென்றுள்ளனர்.

இந்நிலையில்தான், இவரை நேரில் பார்த்து உறுதி செய்த காவல்துறையினர், ஆகஸ்ட் 27 ஆம் தேதி கைது செய்ய சென்றபோது, இதனை அறிந்த தனுஷ் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு தப்பி ஓட முயன்றார். பிறகு, 8 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி சென்று பிடித்துள்ளனர்.

அப்போது, சிறுவனை அவரிடமிருந்து வாங்கி தாயிடம் ஒப்படைக்க முயன்றபோது, அச்சிறுவன் கடத்திய தனுஷிடமிருந்து வராமல் கதறி அழுதுள்ளார்.

இதனால், திகைத்துப்போன காவல்துறையினர், சிறுவனை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்து தாயிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடத்தியவரை பிரிய மனமில்லாமல் சிறுவன் அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.