டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தன் X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், டெல்லியில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, டெல்லியில் கடந்த 2021 ஜூலை 21ஆம் தேதி, 13 சிறுமி ஒருவர் பள்ளி அருகே கடத்தப்பட்டார். சிறுமி வீடு திரும்பாததால் அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறுமியை காவல் துறை தேடிவந்தனர். இதற்கிடையே இரண்டு வருடங்களாகியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த 18ஆம் தேதி, கடத்தப்பட்ட சிறுமியின் தாய், டெல்லி மகளிர் ஆணையத்தை அணுகி தன் மகளை மீட்டுக்கொடுக்க உதவு கோரினார்.
அதன்படி டெல்லி காவல் துறையை இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுமியை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சியை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. இதைடுத்து, கடந்த 19ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் சிறுமி மீட்கப்பட்டார்.
விசாரணையில், ஆன்லைனில் சந்தித்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது பள்ளிக்கு அருகில் இருந்து தன்னை கடத்திச் சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன்னை பஞ்சாப், சண்டிகர் மற்றும் உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் தன்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் சிறுமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களையும் கைது செய்ய டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதேபோல், டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு14 வயது சிறுமி, தன் தந்தையின் நண்பரால் பல மாதங்கள் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பம் தரித்த நிலையில், மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.