ஓநாய் எக்ஸ் தளம்
இந்தியா

மீண்டும் அதிர்ச்சி! 2 வயது சிறுமியை தூக்கிச் சென்று கடித்துக் கொன்ற ஓநாய்.. உ.பியில் தொடரும் வேட்டை!

Prakash J

இந்தியா-நேபாள எல்லையில் அமைந்திருக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஓநாய்கள் அச்சுறுத்தி வருவதாகவும், 7 குழந்தைகள், 1 பெண் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஓநாய்கள் தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கடந்த வாரம் அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் தூக்கத்தை இழந்து தவித்த மக்கள், வனத்துறையினருடன் இணைந்து ஓநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ’ஆபரேஷன் பெடியா’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த நடவடிக்கையில் முதலில் ட்ரோன்கள் மூலம் ஓநாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பிறகு, அப்பகுதியில் வலைகளும் கூண்டுகளும் வைக்கப்பட்டு அவைகள் பிடிக்கப்பட்டன. அதில் 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் நிர்வாகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தின் மஹ்சி பகுதியில் மூன்று வெவ்வேறு ஓநாய் தாக்குதல்களில் 1 குழந்தை கொல்லப்பட்டதுடன், இரண்டு பெண்கள் காயமடைந்தனர். அதேநேரத்தில் அண்டை மாவட்டமான சீதாபூரிலும் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம், இதுவரை ஓநாய்கள் தாக்குதலில் 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தூங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுமியை ஓநாய் தூக்கிச் சென்று கொன்றதாகக் கூறப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மக்கள் நலனா? அரசியலா? | சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ்... கேள்வி எழுப்பிய காங்கிரஸ்!

இதுதொடர்பாக கோட்ட வனஅலுவலர் நவீன் கண்டேல்வால், "அப்பகுதிகளில் ஓநாய், புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் கால்தடங்களை எங்கள் குழுவினர் கண்டுபிடிக்கவில்லை. குள்ளநரிகளின் கால்தடங்களே கண்டறியப்பட்டு வனக்குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் தாக்குதல் குறித்து வதந்திகளை பரப்புவதையும், பீதியை ஏற்படுத்துவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். விலங்குகள் காணப்பட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் அப்பகுதி மக்கள் ஓநாய்களே தம்மைத் தாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தைகளையும் அவைகளே தூக்கிச் சென்று கொன்றுவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஓநாய்கள் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு புதிய கிராமத்தைத் தாக்குவதுதான், இந்தப் பிரச்னைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே பஹ்ரைச் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களின் நிலைமையை மதிப்பாய்வு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: புல்டோசர் நடவடிக்கை: சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்... வரவேற்ற ராகுல் காந்தி!