கார் புதியதலைமுறை
இந்தியா

கேரளா: ஏர்பேக் விரிவடைந்ததில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

ஒரு ஏர்-பேக்கால், ஒரு குழந்தையின் உயிர் போயுள்ளது என்றால், நம்பமுடிகிறதா? ஆம், அப்படியொரு சோக சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Jayashree A

கார் உற்பத்தியாளர்கள், மக்கள் விரும்பக்கூடிய வகையில் அதிநவீன முறையில் புதுப்புது கார்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கார்களில் நவீனத்துவமும் அதிகரித்து வருவதால், கார் விற்பனையும் பெருகி வருகிறது.

அதே வேளையில் கார் விபத்துகள் அதிகரித்து வருகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. அப்படியான விபத்துக்களிலிருந்து பயணிகளை காப்பதற்காக கார் உற்பத்தியாளர்கள் காரின் உட்பகுதியில் ஏர்பேக் என்னும் ஒரு உயிர்காக்கும் கருவியை பொருத்துவதும் உண்டு.

கார் விபத்து ஏற்படும் பொழுது, அந்த ஏர்பேக்கானது விரிவடைந்து உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்கும். இதன்மூலம் அன்றாடம் ஏராளமானவர்கள் உயிர்பிழைக்கின்றனர். ஆனால் ஒரு ஏர்-பேக்கால், ஒரு குழந்தையின் உயிர் போயுள்ளது என்றால், நம்பமுடிகிறதா? ஆம், அப்படியொரு சோக சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவை அடுத்து உள்ள மலப்புரம் மாவட்டத்தில் ஒரு குடும்பம் தங்களது இரண்டு வயது குழந்தையுடன் கொட்டக்கல் - படபரம்பு பகுதி வழியாக காரில் சென்றுள்ளனர். காரானது நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருக்கையில், எதிர்பக்கம் அதிவேகமாக டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. எதிரெதிரே வந்த இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்து நடந்தது தெரிந்தவுடன் அப்பகுதியில் இருந்த மக்கள் விரைவாக காரில் இருந்தவர்களை மீட்கவந்துள்ளனர். விபத்தில் சிக்கிக்கொண்ட காரில் ஏர்பேக் விரிவடைந்து அனைவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது. ஆனால் காரில் முன்சீட்டில் தன் தாயின் மடியில் அமர்ந்தபடி பயணம் செய்த 2 வயது குழந்தை, தன் முகத்தை மூடுமளவுக்கு திடீரென ஏர்பேக் விரிவடைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.