ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மீமந்தர் பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேரும் புல்வாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.