குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில், “பிறந்து சில தினங்களேயாகும் பச்சிளம் குழந்தைகளை கருப்புச்சந்தையில் சிலர் விற்று வருகின்றனர். குழந்தைகளை விற்ற பெண் மற்றும் வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை வார்டு பாய் மற்றும் பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகளை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை விலைக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளது. டெல்லி மட்டுமன்றி பல மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சில பெரிய மருத்துவமனைகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
ஏழை பெற்றோரின் குழந்தைகளை குழந்தைப்பேறு இல்லாத பணக்கார பெற்றோர்களுக்கு விற்பதுதான் கடத்தல் கும்பலின் குறிக்கோளாக உள்ளதென சொல்லப்படுகிறது. டெல்லியில் இப்படியான ‘பச்சிளம் குழந்தைகள் விற்பனை’ அதிகளவில் நடப்பதாக தொடர்ந்து செய்திகள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில், காவல் துறையும் அவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்து வருகிறது.