பீகாரில் இரும்பு திருடியதாகக் கூறி 2 நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே ஒரு பெரிய இரும்பு கடை உள்ளது. அங்கு இரும்புக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 கிலோ இரும்பு திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு நபர்கள் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் இரும்பு திருட வந்தவர்கள் என்று நினைத்த உள்ளூரைச் சேர்ந்த சிலர் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் இரண்டு நபர்களும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக சரமாரியாக அடித்துள்ளனர். இதில் இருவரும் மயக்கமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிக்கலாமே: கணவருக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு செய்த மனைவி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்