இந்தியா

“எங்களை அடித்தே கொன்றுவிடாதீர்கள்”.. கெஞ்சிய இளைஞர்களை அடித்தே கொன்றே ஊர்மக்கள்..!

Rasus

குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்துக் கொண்டு இளைஞர்கள் இருவரை பொதுமக்கள் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்தல் சம்பவம் அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் அங்லாங் மாவட்டத்தில் உள்ள டோக்மோகா பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் சிலர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியிருக்கிறது. இந்த நேரத்தில் தான் அபிஷித் நாத் மற்றும் நிலோட்பால் தாஸ் ஆகிய இருவரும் டோக்மோகா பகுதிக்கு தங்களது காரில் சென்றிருக்கின்றனர். அவர்களை குழந்தைக் கடத்தல்காரர்கள் என நினைத்துக் கொண்ட உள்ளூர் மக்கள் அவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.  அவர்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தபோது இருவரையும் கட்டி வைத்த உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக முகம், கை, கால், முதுகு என பல இடங்களில் தாக்கியிருக்கின்றனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதில், நிலோட்பால் தாஸ் உள்ளூர் மக்களிடம் எங்களை அடிக்காதீர்கள் என கெஞ்சுகிறார். “ நாங்களும் அஸ்ஸாம் வாசிகள் தான். குற்றவாளிகள் அல்ல. தயவுசெய்து எங்களை அடித்தே கொன்றுவிடாதீர்கள். நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம். எங்களை தயவு செய்து நம்புங்க” என வலி தாங்க முடியாமல் கெஞ்சுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் பெயரை கூறும் அவர் எங்களை தயவு செய்து போக விடுங்கள் என மன்றாடி பார்க்கிறார் ஊர் பொதுமக்களிடம். ஆனால் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து தாக்குவதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளதோடு போலீசார் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். வதந்திகளை நம்பி பொதுமக்கள் அப்பாவி மக்களை கொல்வது கடும் கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார். கொல்லப்பட்ட நிலோட்பால் தாஸ் பொறியாளராக பணியாற்றி வந்தவர். அதேசமயம் அபிஷித் நாத் சொந்த வியாபாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.