ஆற்றைக்கடக்கும் ஆம்புலன்ஸ் ட்விட்டர்
இந்தியா

கேரளா | பாலம் இல்லாததால் நீச்சலடித்து ஆற்றை கடக்க முயன்ற கணவன்... திடீர் வெள்ளத்தால் நேர்ந்த சோகம்!

அட்டப்பாடி கிராமத்திலுள்ள வாரகர் ஆற்றை இரு சிவில் போலீஸ் அதிகாரிகள் கடந்துள்ளனர். அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Jayashree A

கேரளாவில் இன்னும் சில கிராமங்களில் சரியான போக்குவரத்திற்கான பாதைகள் அமையப்பெறாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதை தற்போது குறிப்பிட்டு சொல்லக்காரணம், மழை நாட்களில் ஊருக்குள் செல்லவேண்டுமென்றால் ஆற்றைக்கடந்து செல்லும் நிலையில் இன்றளவும் அங்கு பல கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பாலக்காட்டிலுள்ள அட்டப்பாடி கிராமம். இந்த நிலையிலுள்ள இந்த கிராமத்தில், தற்போது இதனாலேயே ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.

அதன்படி அட்டப்பாடி கிராமத்திலுள்ள வாரகர் ஆற்றை இரு சிவில் போலீஸ் அதிகாரிகள் கடந்துள்ளனர். அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஏன் அவ்வழியே சென்றனர்? என்ன நடந்தது? பார்க்கலாம்...

கேரளா கண்ணூரை அடுத்து உள்ள எடவாணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மற்றும் மேல பூத்தையார் ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணன். நண்பர்களான இவர்கள் இருவரும் அகலி கிராமத்தில் சிவில் போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தினமும் அட்டப்பாடி வாரகர் ஆற்றை அல்லது சாலையை கடந்துதான் வேலைக்குச் சென்று வரும் சூழலில் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கிருக்கும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பி, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று முருகன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்கு மருந்து வாங்க நினைத்து தான் பணிபுரியும் அலுவலகம் அருகில் இருந்த மருந்து கடை ஒன்றில் மருந்தை வாங்கியுள்ளார். இதனால் நேரம் ஆனதால், சாலை வழி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவே வீடு திரும்ப நினைத்த முருகன் நண்பன் கிருஷ்ணனுடன் வீட்டிற்கு புறப்பட தயாராகியிருக்கிறார். அப்பொழுது மழை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து முருகன் தன் மனைவியிடம் தெரிவிக்கவே, அவர் முருகனிடம், “நீங்கள் வெள்ளத்தில் ஆற்றைக்கடந்து வீட்டிற்கு வரவேண்டாம், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் வீட்டிற்கு வந்தால் போதும்” என்று கூறியுள்ளார். ஆனால், முருகன் மனைவி சொல்லை கேட்காது, ‘எப்பொழுதும் கடக்கும் ஆறுதானே... இன்று என்ன செய்யப்போகிறது?’ என நினைத்த ஆற்றைக் கடக்க முயன்றுள்ளார்.

ஆற்றின் வழியே ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்ட உடல்கள்

வெள்ளத்தினால் படகு சேவை ஏதும் இல்லாததாலும், இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதாலும் துணிந்து இருவரும் வாரகர் ஆற்றை நீச்சல் அடித்து கடக்கலாம் என நினைத்து ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில், கிருஷ்ணாவும், முருகனும் ஆற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. இதில் இருவரும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். இரண்டு நாட்கள் தீவிர தேடுதல் பணியை அடுத்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை முடிவில் அவர்களின் குடும்பத்தினரிடையே ஒப்படைக்கப்பட்டது.

இதில் முருகனுக்கு கடந்த மார்ச் மாதம்தான் திருமணம் முடிந்துள்ளது என்பது துயரம். இன்னும் சோகம் என்னவென்றால், முருகனின் பேன்ட் பாக்கெட்டில் அவர் தனது மனைவிக்காக வாங்கிய காய்ச்சல் மருந்து இருந்துள்ளது. அதேபோல எந்த ஆற்றில் நண்பர்கள் உயிரைத் துறந்தனரோ அதே ஆற்று வழியாக ஆம்புலன்ஸில் அவர்களின் உடல் அவரது சொந்த ஊருக்கு சென்ற புகைப்படம் நெஞ்சை உலுக்கும்படி இருந்தது.

‘வராதேன்னு சொன்னேன் கேட்டியா’ என்பது போல... கணவன் முருகனின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழும் காட்சி காண்பவரின் கண்களை குளமாக்கியது.

முன்னதாக அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊருக்கு சாலை வேண்டியும் ஆற்றை கடக்க பாலம் வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதில் முருகனும் ஒருவர். இவர்களின் சீரிய முயற்சிக்கு பின் 2015-ல் அந்த ஊருக்கு சாலை வந்துள்ளது. ஆனால் இன்னமும் வராகர் ஆற்றின் மீது பாலம் வரவில்லை. இதுவே தற்போது முருகனின் உயிரை பறித்துள்ளது.