உத்தரபிரதேசம் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சித்தார்த் நகர் பகுதியில் கொஹன்யா கிராமத்தில் நேற்று இரவு முதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்தில், அலகாபாத் நகரில் இன்று காலை மீண்டும் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலையில் உள்ள தலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அமைதி காக்குமாறு அப்பகுதியின் முக்கிய தலைவர்களிடம் வலியுறுத்தினார்.
இதனையடுத்து சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துணை ஆணையர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு லெனின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து, தமிழகத்தின் பெரியார் சிலையும், உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் சேதப்பட்டது. இந்தச் சம்பவங்களுக்கு பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.