இந்தியா

யாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் தண்டனையா..?

யாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் தண்டனையா..?

rajakannan

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 24 தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் 1.2 கோடி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மனிதவள மேம்பாட்டு துறையில் கீழ் நேரடியாக சிபிஎஸ்இ இயங்குகிறது. மத்திய அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தும் தேர்வில் இப்படியொரு தவறு நடைபெற்றுள்ளது. இந்த தவறை ஒருபொழுதும் எளிதானதாக எடுத்துக் கொள்ள முடியாது.

கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ தயாரிப்புகளுடன் மாணவர்கள் தேர்வு எழுதியிருப்பார்கள். மீண்டும் ஒருமுறை தேர்வுக்கு தயாராவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயம். யாரோ சிலர் செய்த தவறுக்கு, தேர்வு எழுதிய சுமார் 25 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மாணவர்களோடு சேர்த்து அவர்களின் பெற்றோர்களுக்கும் இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.

மார்ச் 26-ம் தேதி 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்ட போதே சுதாகரித்து இருந்தால், 10-ம் வகுப்பிற்கான கணித தேர்வின் போது மீண்டும் அப்படி நடந்திருக்காது. இது சிபிஎஸ்இ அமைப்பின் அலட்சியத்தையே காட்டுகிறது. பிரதமர் மோடி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதில், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவர்கள். அப்படி தயாராகும் மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். நீட் போன்ற தேர்வுகளையே சிபிஎஸ்இ தான் நடத்துகிறது. இதனை நம்பித்தான் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த விவகாரம் சிபிஎஸ்இ மீதான நம்பிக்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.