1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு அமைப்பால் கைவிடப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் விளைவாக சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அரசின் கணக்குப்படி இந்த வன்முறைகளில் சுமார் 2800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசின் கணக்கு கூறுகிறது. டெல்லியில் நடந்த இந்த வன்முறை சம்பவங்கள் காவல்துறையினரின் துணையுடனே நடந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மொத்தம் 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்தது. 241 வழக்குகளில் 186 வழக்குகள் விசாரணை செய்யாமலேயே முடித்து வைக்கப்பட்டன. விசாரிக்காமல் முடித்து வைக்கப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.