குஜராத் இளைஞர் ட்விட்டர்
இந்தியா

குஜராத்: நடனப் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

குஜராத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கர்பா நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்

சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம்கூட, ஆந்திராவில் இளைஞர் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆந்திரா: நடமாடிக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்

குஜராத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் மரணம்

இந்த நிலையில், குஜராத்தில் கர்பா நடனப் பயிற்சியின்போது 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வினித் மெஹுல்பாய் குன்வாரியா என்ற 19 வயது இளைஞர், நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா நடனப் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கான பயிற்சியை உற்சாகமாக மேற்கொண்டு வந்த வினித், திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். மயங்கிவிழுந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு, அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பயிற்சியாளர் மற்றும் உறவினர் சொல்வது என்ன?

இதுதொடர்பாக கர்பா பயிற்சியாளர் தர்மேஷ் ரதோட் கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களாக வினித் இங்குப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த 24ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் உற்சாகமாக கர்பா நடனப் பயிற்சியை மேற்கொண்ட வினித், திடீரென மயங்கி தரையில் விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் பலனில்லை. வினித் மாரடைப்பால் உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

வினித்தின் உறவினர் ஒருவர், ”19 வயதான அவருக்கு எந்தவிதமான நோய்களும் இல்லை. அவர் முழுமையாக நலமுடன் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கம் முதல் இதுவரை அம்மாநிலத்தில் 6 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த வாரம் இதுபோல் கர்பா நடனமாடிய ஒருவரும், மாத தொடக்கத்தில் உடற்பயிற்சி செய்த ஒருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு முதல் தொடரும் மரணங்கள்

கடந்த ஆண்டு, பிரபல பாடகர் கே.கே. மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக பாடுவதை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு திரும்பியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல், கேரளாவைச் சேர்ந்த மூத்த பாடகர் எடவா பஷீர் ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதுபோல், ஜம்முவில் யோகேஷ் குப்தா என்ற இளைஞர், மேடையில் நடனமாடியபோது தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஜனவரி 2ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர், மஸ்கட்டில் தன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

சத்தீஸ்கர்

அடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி ஹைதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், பிப்ரவரி 26ஆம் தேதி, தெலுங்கானாவில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவரும், பிப்ரவரி 28ஆம் தேதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வீரர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல், கடந்த மார்ச் மாதம் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடித்த ஒருவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மே 5ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் ஒருவர் தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்று நடனமாடியபோது, திடீரென சரிந்துவிழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு செப்டம்பர் மாதத்தில்கூட கர்நாடகாவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோதே, இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நம் ஊரில் டப்பிங் பணியில் இருந்தபோதே நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மறைந்ததும் நினைவுகூரத்தக்கது.

இதையடுத்து இதய நலனில் அனைத்து வயதினரும் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகப்பட தொடங்கியுள்ளது.