மித்லேஷ் மாஜி எக்ஸ் தளம்
இந்தியா

அதெப்படி திமிங்கலம்! ”ரூ.2 லட்சம் கொடுத்தால் IPS ஆக்குறேன்” ஏமாந்த இளைஞர்.. பீகாரில் நூதன சம்பவம்!

ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்குச் சேர வேண்டும் என்கிற ஆசையில் பீகார் இளைஞர் ஒருவர் ரூ.2 லட்சம் பணத்தை இழந்திருப்பதுடன், தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

Prakash J

காவல் துறையில் வேலைக்குச் சேருவது என்பது பலருக்கும் பிடித்தமான விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், அந்த வேலை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அரசு வைக்கும் அனைத்துத் தேர்வுகளிலும், பயிற்சிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அந்த வேலையில் சேர முடியும். இந்த நிலையில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்குச் சேர வேண்டும் என்கிற ஆசையில் இளைஞர் ஒருவர் ரூ.2 லட்சம் பணத்தை இழந்திருப்பதுடன், தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மித்லேஷ் மாஜி. 18 வயது நிரம்பிய இந்த இளைஞரிடம், ’ரூ.2 லட்சம் தந்தால் உனக்கு போலீசில் வேலை வாங்கி தருகிறேன்’ என மனோஜ் சிங் என்பவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில், அவரும் பணத்தைப் புரட்டிக் கொடுத்துள்ளார். பின்னர், மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார். இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் மித்லேஷ் மாஜி, ஐபிஎஸ் சீருடையை அணிந்துகொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தனது தாயை சந்தித்து ஆசி பெறச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க:டெல்லி | யுபிஎஸ்சி மாணவியின் அறையில் ரகசிய கேமரா.. சிக்கிய வீட்டு உரிமையாளரின் மகன்! பகீர் சம்பவம்

பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டதுஅங்கு அவர்களிடம், ‘இன்றுமுதல் நான் ஐபிஎஸ் அதிகாரி’ எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்குள்ள கடைகளில் மோசடி வேலைகளிலும் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன அவ்வூர் மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போலி ஐபிஎஸ் உடையில் இருந்த மித்லெஷ் மாஜியைக் கைது செய்தனர்.

அப்போதும் அவர், 'நான் ஒரு ஐபிஎஸ்' என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா|வண்டியில் வைத்த பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழிப்பு; வியாபாரியின் அநாகரீக செயல் - வீடியோ!