நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது திருபுவன் சர்வதேச விமான நிலையம். இந்நிலையில், இன்றைய தினம் காலை 11 மணியளவில் பைலட், விமான நிலைய ஊழியர்கள் உட்பட்ட 19 பேருடன் போக்காரா நகருக்கு புறப்பட்டது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம். அப்போது ஓடுதளத்தில் இருந்து TAKE OFF ஆக முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், ஓடுதளத்தை விட்டு வெளியே சென்று விபத்தில் சிக்கியது.
ஓடுதளத்தின் மேல் எழுந்த விமானத்தின் ஒரு பக்க இறக்கை ஓடுதளத்தில் உரசிய நிலையில், ஒருசில நொடிகளிலேயே முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால், நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தால் அந்த இடம் முழுவதுமே கரும்புகையால் சூழ்ந்தது. பற்றி எரிந்த தீயை வீரர்கள் அணைத்தபோதிலும், விமானத்தில் இருந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழிந்தனர். காப்பாற்றிவிடலாம் என்று நடந்த மீட்புப்பணியின் போது 18 சடலங்களே மீட்கப்பட்டன. இதில் விமானி ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது, “ஓடுதளத்தில் சென்றபோதே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியது. CRJ200 என்ற இந்த விமானம் 50 பேர் அமரக்கூடியது. வானில் பறப்பதற்கு முன்பாகவே கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது” என்று தெரிவித்தனர்.
சௌரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 விமானங்கள், நேபாளில் உள்நாட்டு பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டுமே சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் காத்மாண்டுவில் அடிக்கடி விமான விபத்துகள் நடந்து வருகின்றன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து என்ற வாக்கில் விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில், 1992ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 167 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த விபத்தில் 67 உயிர்கள் பறிபோனது.
விமான நிலையத்தை சுற்றிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் இருப்பதால், உலகிலேயே அபாயகரமான விமான நிலையங்களில் ஒன்றாகவும் திருபுவன் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. பாதுகாப்பற்ற விமான நிலையமாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் மலைகள், பள்ளத்தாக்குகள் இருந்தாலும், சரியான பயிற்சி மற்றும் பாதுகாப்பு குறைபாடும் விபத்துகள் தொடர காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.