இந்தியா

மும்பை, புனேவில் கட்டிடம் இடிந்து விழுந்து 18 பேர் உயிரிழப்பு

மும்பை, புனேவில் கட்டிடம் இடிந்து விழுந்து 18 பேர் உயிரிழப்பு

webteam

கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் மும்பை மற்றும் புனேவில் மொத்தம் 18 பேர் பலியாயினர். 

மும்பையில் சுவர் இடிந்து விழுந்து 12 பேர் பலியாகினர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு இடையில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் தொடர்ந்து 5வது நாளாக நீடிக்கும் கன மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, ரயில், பேருந்து சேவை பெரிதும் முடங்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மும்பை கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் இன்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் பலியாயினர். 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியோரை தேசிய பேரிடர் மீட்புப் படை யினர் மீட்டு வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் புனே அருகில் உள்ள அம்பேகானில் சிங்காட் கல்லூரி சுவர் இடிந்ததில் 6 பேர் பலியாயினர். 

கடந்த வாரத்தில் மும்பையில் பெய்த பலத்த மழையின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், இப்போது மும்பை மற்றும் புனேவில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.