இந்தியா

“பால்கோட் தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்” - இத்தாலி செய்தியாளர்

“பால்கோட் தாக்குதலில் 170 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்” - இத்தாலி செய்தியாளர்

webteam

புல்வாமாவில் இந்திய படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதற்கு பழிதீர்க்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அடையாளம் கண்டு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. முதல்முறையாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டது. 

தாக்குதலுக்கு பிறகு பேசிய இந்திய அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை அடிப்படையாக கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் , எண்ணிக்கை சரியாக இல்லாவிட்டாலும் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்றும் , தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்தனர். 

இந்திய அதிகாரிகள் கூறுவதில் உண்மை இல்லை என்றும் , இந்திய விமானப்படை விமானங்கள் உள்நுழைந்து நடத்திய தாக்குதல் வெறும் காட்டுப்பகுதிக்குள் நடந்த ஒன்று என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஆனால் தாக்குதல் உண்மை என இந்திய அதிகாரிகள் கூறினர்

பாகிஸ்தான் இப்போது வரை இந்தத் தாக்குதலை மறுத்து வரும் நிலையில் , இத்தாலிய பத்திரிகையாளர் பிரான்செஸ்கா மரினோ பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் “பிப்ரவரி 26-ம் தேதி காலை 3.30 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால் 6 மணிக்குதான் தாக்குதல் நடந்த இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் வந்தது. 

தாக்குதலுக்கு உள்ளான சுமார் 45 பேரை உடனடியாக ஷின்கியாரியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்போது வரை பலர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் இருக்கிறார்கள். சிகிச்சை முடிந்தாலும் இன்னும் பலர் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் உள்ளார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி இந்தியா நடத்திய தாக்குதலில் 120-170 ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் “கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குடும்பத்தினர் வழியாக செய்தி கசியலாம் என்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது , ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாத பயிற்சியாளர்களும் இதில் கொல்லப்பட்டனர். அங்குள்ள மக்களை விசாரித்த போது சில ட்ரக்குகளில் உடைந்து போன கட்டிடங்களின் கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறினர். அத்தோடு முகாம் இருந்த இடம் சீலிடப்பட்டு இப்போது வரை யாருக்கும் அனுமதி இல்லை, மாறாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடம் உள்ளது” எனவும் பிரான்செஸ்கா மரினோ கூறியுள்ளார்.