இந்தியா

தேர்வு நடக்கும் போதே கல்லூரி வளாகத்தில் மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

தேர்வு நடக்கும் போதே கல்லூரி வளாகத்தில் மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

EllusamyKarthik

நாடு முழுவதும் ஹத்ராஸ் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உத்திர பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்திற்குள் பதினேழு வயது சிறுமி ஒருவரை அந்த கல்லூரியின் மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என போலீசார்தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள ஜான்சி கல்லூரியில் உத்திர பிரதேச சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்ற போது அரங்கேறியுள்ளது. 

அதே வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிறுமியின் அழுகுரலை கேட்டு அவரை மீட்டு சிப்ரி பஜார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த தன்னை வலுக்கட்டாயமாக கல்லூரிக்குள் இழுத்துச் சென்று பலாத்தகாரம் செய்ததாகவும், தன்னிடமிருந்த 2000 ரூபாயை பறித்துக் கொண்டதோடு இதனை யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் புகாரும் கொடுத்துள்ளார்.

முதற்கட்டமாக சுமார் எட்டு மாணவர்களை போலீசார் கைது செய்த்துள்ளனர். அதில் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376D, 395, 386, 323, 120B மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் சொல்லியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

பத்தாம் வகுப்பு படிக்கின்ற அந்த சிறுமி அங்கு ஏன் வந்தார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், குற்றபத்திரிக்கையை விரைவாக தாக்கல் செய்யும் படி காவல் துறையினருக்கும் ஜான்சி மாவட்ட மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையில் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எனவும், இந்த வழக்கு தொடர்பாக போலீசாரோடு ஒத்துழைக்க கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அந்த கல்லூரியின் முதல்வர்.