இந்தியா

வெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை

வெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை

webteam

கேதர்நாத் வெள்ளத்தின் போது தாய், தந்தையை பிரிந்த ஒரு மனநலமற்ற சிறுமி மீண்டும் தனது பெற்றோருடன் சேர்ந்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தாக்கம் இன்றளவும் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. அந்த வெள்ளத்தில் யாத்திரைக்கு வந்த பக்தர்களும் நிலைகுலைந்தனர். அவ்வாறு குலைந்த ஒரு குடும்பத்தின் சோகமான நெகிழ்ச்சிக் கதைதான் இது. யாத்திரை மூலம் வேண்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்தால் மகள் சஞ்சாலியின் மனநலம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத்திற்கு வந்துள்ளனர். அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளம் 12 வயதான மகளையும் பெற்றோரையும் பிரித்துள்ளது.

மகளை காணவில்லை என்றும் கதறித்துடித்த அத்தம்பதியினர் தேடிந்திருந்து, ஓய்ந்துபோய் துயரத்துடன் ஊர் திரும்பினர். மனநலமற்ற தங்கள் மகள் எங்கு இருக்கிறாளோ, என்ன சாப்பிட்டாலோ, உயிருடன்தான் இருக்கிறாளா என நாள்தோறும் கண்ணீரை வடித்த வண்ணம் அந்தத் தாயும், தந்தையும் வாழ்ந்து வந்தனர். தங்கள் மகளை காணவில்லை என உத்தரகாண்ட் காவல்நிலையத்திலும், தங்கள் ஊர் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். 5 வருடங்கள் கழிந்தும் மகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தொலைந்துபோன அந்தச் சிறுமி கேதர்நாத் யாத்திரை வந்திருந்த சில நல்ல சாமியர்களின் கையில் சேர்ந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த அந்தச் சாமியர்கள் சிறுமியை தங்களுடன் அழைத்துச்சென்று தங்களுக்கு தெரிந்த நம்பகத்தன்மை வாந்த சிறுவர்கள் நலக்காப்பகம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் சிறுமியிடம் முகவரி, பெற்றோர் குறித்து விசாரிக்கும் போது, அச்சிறுமி மனநலம் பாதித்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை தங்கள் பொறுப்பிலேயே அந்தக் காப்பகம் வளர்த்து வந்துள்ளது. தற்போது 17 வயது நிரம்பிய அந்தச் சிறுமிக்கு, சற்று விவரம் தெரியவர அலிகார் என்ற ஒற்றை வார்த்தையை நினைவுபடுத்திக் கூறியுள்ளார்.

அந்த வார்த்தை உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் என்பதை அறிந்த தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் உடனே, அந்த ஊர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். காவலர்கள் கொடுத்த தகவலும், சிறுமியின் தகவல்களும் பொறுந்திப்போக மகிழ்ச்சியுடன் அந்த ஊருக்கு சென்றுள்ளார். 

அங்கு சென்றதும் சிறுமியின் முகவரியை கேட்க அவர்கள் காவல்நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் சிறுமியின் தாத்தா ஹரிஷ் சந்த் மற்றும் பாட்டி சகுந்தலா தேவியின் முகவரியை கொடுத்துள்ளனர். சிறுமியை தொண்டு நிறுவன உரிமையாளர் அங்கு அழைத்துச் சென்றுள்ளார். 5 வருடங்களுக்கு பிறகு தங்கள் பேத்தியை கண்ட தாத்தாவும், பாட்டியும் ஆனந்தக் கண்ணீர் வடித்து, சிறுமியை கட்டித்தழுவியுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்ட தொண்டு நிறுவன உரிமையாளர் மிஷ்ரா நெகிழ்ச்சியுடன், ஆனந்தம் அடைந்துள்ளார். வெள்ளத்தால் பிரிந்த மகள் திரும்பி வந்த சந்தோஷத்தில் அந்தக் குடும்பமே சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.