இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தாயாரை சுட்ட 16 வயது சிறுமி - கைதுசெய்து போலீசார் விசாரணை

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தாயாரை சுட்ட 16 வயது சிறுமி - கைதுசெய்து போலீசார் விசாரணை

சங்கீதா

தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞரின் தாயாரை, 16 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பஜன்பூரா சுபாஷ் மொகலா பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இவரது கடைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அந்த 50 வயதுப் பெண்ணை நோக்கி சுட்டுள்ளார். இதனை எதிர்பாராத அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், அப்படியே மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கியில் சுட்ட சிறுமி அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார்.

பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதும் அக்கப்பக்கத்திலிருந்தர்கள் ஓடி வந்து பார்த்துள்ளார்கள். அப்போது மளிகைக் கடை நடத்திவந்தப் பெண் படுகாயங்களுடன் சரிந்து கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துட்டு பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர்.

தகவலின் பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், அக்கம்பக்கத்தினரின் வாயிலாக நடந்தவைகளை அறிந்துக்கொண்டனர். இதற்கிடையில், துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு மாற்றப்பட்டார். இதன்பின்னர் விசாரணை நடத்திய போலீசார், 16 வயது சிறுமியை சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரததில் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் கடந்த 2021-ம் ஆண்டு இந்த சிறுமியை, மளிகைக் கடை நடத்தி வந்த பெண்ணின் மகனான 25 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அப்போது சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஏற்கனவே போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் இளைஞரை கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் 16 வயது சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. சிறுமியிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்றும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.