இந்தியா

42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்!

42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்!

webteam

உத்தர பிரதேச மாநிலம் ஹாசிம்புராவில் 1987 ஆம் ஆண்டு நடந்த படுகொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 16 போலீசாருக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள  ஹாசிம்புரா பகுதியில் 1987 ஆம் ஆண்டு இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் சுமார் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கலவரத்தை ஒடுக்க ஆயுதப் படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சுமார் 42 இளைஞர்கள் ஆயுதப்படை போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்கள் அருகில் இருந்த கால்வாயில் மிதந்ததையடுத்து, இந்த விவகாரம் பரபரப்பானது. 


இந்த வழக்கை, காசியாபாத் நீதிமன்றம் முதலில் விசாரித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின்  உத்தரவுப்படி வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. அவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார். இதனால் 16 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, 2015 ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தது. கடந்த மாதம் 6ஆம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. டெல்லி கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தும், விடுதலை செய்யப்பட்ட 16 போலீசாருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதித்தும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட போலீசார் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர்.

31 வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக, இதில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.