இமாச்சல் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடுபத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக காவல்துறை சார்பில் கூறுகையில் இன்று காலை 8 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்து விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல் பிரதேச மாநிலம் குலுவில் நடைபெற்ற பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் அலுவலக நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- செய்தியாளர்: விக்னேஷ் முத்து