இந்தியா

30 நாட்களில் 157 திட்டங்கள்: தேர்தல் நேரத்தில் முனைப்பு காட்டும் பிரதமர் மோடி..!

30 நாட்களில் 157 திட்டங்கள்: தேர்தல் நேரத்தில் முனைப்பு காட்டும் பிரதமர் மோடி..!

webteam

மக்களவை தேர்தலுக்கும் முன்னதான 30 நாட்களில் 157-க்கும் அதிகமான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்

மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதி பங்கீடு என்பதை தாண்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி பரபரப்பாக இயங்கி வருகிறார். 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 28 சுற்றுப் பயணங்களில் மோடி பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு மட்டுமே 4 முறை வந்து சென்றுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் மத்திய அரசு மிகப்பெரிய திட்டங்களுக்கு வாக்குறுதி கொடுக்க முடியாது. அதுபோல பெரிய அளவிலான திட்டங்களை தொடங்கி வைக்க முடியாது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பல திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பிப்ரவர் 8 முதல் மார்ச் 9 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் ரயில்வே, நெடுஞ்சாலை, மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் சுமார் 157 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து இருக்கிறார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

காணொளி காட்சி மூலம் 17-க்கும் அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி ஏற்கெனவே தொடங்கப்பட்ட பழைய திட்டங்களை சிறிது மாற்றம் செய்து புதிது போல மீண்டும் தொடங்கி வைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை இன்றோ, நாளையோ வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.