கேரளா தீ விபத்து புதிய தலைமுறை
இந்தியா

கேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து; 150 பேர் படுகாயம்... 8 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் அமைந்துள்ளது அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில். இங்கு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடிப்பதற்காக குடோனில் பட்டாசுகள் வாங்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று நள்ளிரவு திடீரென பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து சரமாறியாக வெடிக்க தொடங்கியுள்ளது.

இதனால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திருவிழாவை காண வந்த பக்தர்களும் வெடி விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

திடீரென நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக, 150 க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் அடைந்திருக்கும் சூழலில், கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனை, அரிமலா மருத்துவமனை, மிம்ஸ் கண்ணூர், மிம்ஸ் கோழிக்கோடு, கே.ஏ.ஹெச். செருவாத்தூர், மன்சூர் மருத்துவமனை, ஏ.ஜெ. மெடிக்கல் காலேஜ் உட்பட பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது கோவில் நிர்வாக தலைவர், செயலாளர் ஆகியோரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.