இந்தியா

கோவா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 15 கொரோனா நோயாளிகள் மரணம்

கோவா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 15 கொரோனா நோயாளிகள் மரணம்

Veeramani

கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை குறைந்ததால், இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 15 பேர் உயிரிழந்தனர்.

கோவா மாநிலத்திலுள்ள கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை, ஆக்சிஜன் வழங்கும் அழுத்தம் குறைந்த காரணத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என நிர்வாகம் தெரிவித்தது.

இன்று அதிகாலை 1 மணியளவில் மருத்துவமனையின் கோவிட் வார்டுகளில் ஆக்ஸிஜன் அழுத்தம் குறையத் தொடங்கியதால் உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகத்தீவிரமான பதட்டத்தை எதிர்கொண்டனர், உடனடியாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர், ஆனால் நிலைமையை உடனடியாக மீட்டெடுக்க முடியவில்லை. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ஆக்ஸிஜன் அழுத்தத்தை மீட்டெடுக்க 20 நிமிடங்கள் ஆகும், இதனால் 15 நோயாளிகள் உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.

ஏற்கனவே இம்மருத்துவனையில் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 26 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் கோவாவில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம் ஆக்ஸிஜன் பிரச்சினைகள் காரணமாக மேலும் இறப்புகள் ஏற்படக்கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிட்ட அடுத்த நாளே மீண்டும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.