இந்தியா

காட்டு விலங்கு தாக்கியதில் சிறுவன் பலி: புலியா சிறுத்தையா ? நீடிக்கும் குழப்பம்

காட்டு விலங்கு தாக்கியதில் சிறுவன் பலி: புலியா சிறுத்தையா ? நீடிக்கும் குழப்பம்

webteam



உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கெரி வனப்பிரிவு கீழ் வரும், சஹாப்தீன் பூர்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தன் (14) என்ற சிறுவன் தீவனம் எடுக்க சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்போது புதரில் மறைந்திருந்த விலங்கானது அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது. அவரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மக்களை கண்ட விலங்கானது அங்கிருந்து ஓடியது. அப்பகுதியில் கூடிய மக்களில் சிலர் சிறுவனைத் தாக்கிய விலங்கானது புலி என்றும், ஒரு சிலர் அதனை சிறுத்தை என்று கூறினர். முன்னதாகவே அங்கு சிறுத்தை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட நிலையில், சிறுவனை தாக்கிய விலங்கு சிறுத்தையாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சக்தாஹா கிராமப் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 13 வயது சிறுவனான பிரிஜேஷ் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், செப்டம்பர் 19 ஆம் தேதி சிறுத்தை வந்துச் சென்றதை கண்டறிந்தனர். சம்பவம் நடந்ததை உறுதி செய்த, கெரி வனத்துறை அதிகாரி அனில் குமார் பட்டேல், தாக்கப்பட்ட விலங்கானது புலியா அல்லது சிறுத்தையா என்பதை உறுதி செய்யவில்லை.

விலங்கின் கால் தடங்களை சேகரித்த பட்டேல், அப்பகுதிக்கு முன்னதாக வந்த சிறுத்தைகளின் கால்தடங்களுடன் அதனை ஒப்பிட்டு சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே கிராமத்தில், கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுவன், தன்னைத் தாக்க வந்த சிறுத்தையிடம் நூலிழையில் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.