விபரீதத்தில் காளி வேடம் முகநூல்
இந்தியா

உத்தரப்பிரதேசம் - விபரீதத்தில் முடிந்த காளி வேடம்.... 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள பில்ஹவுரின் பம்பியாபூர் என்ற கிரமாத்தை சேர்ந்தவர் சுபாஷ் சைனி. இவரது வீட்டில் கடந்த சில நாட்களாகவே பகவத் கீதை நாடக நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. இதில், அந்த கிராம மக்கள் பலரும் பங்கேற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே 1 ஆம் தேதி இரவு நடந்த பகவத் கீதை நாடகத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் பகவத் கீதையில் வரும் கதாபாத்திரங்கள் போல உடை அணிந்து உற்சாகத்தோடு நடித்து வந்துள்ளனர்.

அப்போது காளிக்கும் பேய்களுக்குமான போரை பிரதிபலிக்கும் விதமாக காளி வேடம் அணிந்து நடித்து வந்த 14 வயது சிறுவன் ஒருவன், பேய் வேடம் அணிந்து வந்த 11 வயது சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார். நாடகம் என்றபோதிலும், சிறுவன் உணர்ச்சிவசப்பட்டு கத்தியை அழுத்தமாக வைத்ததாக தெரிகிறது.

இதில் 11 வயது சிறுவனின் கழுத்தில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் இருந்து மருத்துவமனைக்கு காயம்பட்ட சிறுவனை அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஊர் மக்கள் தெரிவிக்கையில், “காளி வேடம் அணிந்திருந்த சிறுவனிடம் அட்டை திரிசூலத்தை பயன்படுத்துமாறு தெரிவித்திருந்தோம். ஆனால், அவரால் அதை கண்டெடுக்க முடியாததால் நிஜ கத்தியை பயன்படுத்திவிட்டார். இதன் காரணமாகவே, இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இறந்த சிறுவனின் தந்தை பப்லு காஷ்யப் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட சிறுவனின் மீது அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.